Skip to main content

பாட கல்வியுடன் வாழ்வியல் நெறிமுறைகளை கற்க மாணவர்களுக்கு வேண்டுகோள்

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
a


அண்ணாமலைப் பல்கலைக்கழக 82வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழாவிற்கு தலைமை ஏற்று மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 5,808 மாணவர்கள் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற 52,764 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  இப்பட்டமளிப்பு விழாவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கங்கள் பெறும்  43 மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 235 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ் ரொக்க பரிசுகளையும், பட்டச்சான்றிதழ்களையும். 277 முனைவர் பட்டங்களையும் வழங்கினார். 

 

an

 

விழாவில் இந்திய அரசின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாய தலைவர் நரசிம்ம ரெட்டி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்திய அளவில் உயர்கல்வித்துறையில் தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளதாகவும், தற்கால கல்வியாளர்கள் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதை குறித்து கவலை தெரிவித்தார்.  ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளின் மூலம் கல்வியை, குறிப்பாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பரப்புவதாகவும் தெரிவித்தார். மேலும் மனிதர்களின் வாழ்வியல் நடத்தைக்கான வழிகாட்டி நூல் என திருக்குறளை குறிப்பிட்டார்.  மாணவர்கள் பாடங்களிலிருந்து கல்வி மட்டும் கற்காமல் அன்றாட வாழ்வியலுக்கான நடத்தைகளையும் மற்ற குடிமகன்களுடன் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.  பட்டமளிப்பு விழா நடத்துவது ஒன்றும் புதிதல்ல, நம்முடைய பாரம்பரியமாக வருவது என்று தெரிவித்து, பட்டச்சான்று பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவித்துகொண்டார்.

 

பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் ஷர்மா ,பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம்,  சண்முகசுந்தரம், மொழியியல் புல முதல்வர் திருவள்ளுவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  பாண்டியன், உமாமகேஸ்வரன், பதிவாளர்(பொ) ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன், அனைத்து புல முதல்வர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

 

பட்டமளிப்பு விழாவுக்கு ஞாயிறு காலையில் செந்தூர் ரயில் மூலம் சிதம்பரத்திற்கு வந்த ஆளுநர் நடராஜர் கோயிலுக்கு 9.10 சென்றார். அளுநர் வருகையையொட்டி கோயிலின் கீழசன்னதியில் கடைகளை திறக்ககூடாது என்று காவல்துறையினர் கெடுபிடிசெய்தனர். பின்னர் ஆளுநர் சென்ற பிறகே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. கடந்த பிப் மாதத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள வந்தபோது சிதம்பரம் நகர வனிகர் சங்கம் சார்பில் சிதம்பரம் நகரத்தில் பாதள சாக்கடை பணிகளில் தரமற்ற வேலைகள் நடைபெறுவது என்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது தமிழக மக்களையும் ஆளுநரை கவர்ந்தது.

 

 அதே போல் இந்த முறையும் ஆளுநர் வருகையின் போது கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் அருகே உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பனை கட்டாததை கண்டித்து உப்பு நீர் குடங்களுடன் ஆளுநரை வரவேற்கும் கவனஈர்ப்பு போராட்டத்தை அறிவித்தனர். பின்னர் போராட்டகாரர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளிக்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் ஆளுநருக்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற்றுவிடகூடாது என்று விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை பட்டமளிப்பு விழாவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆளுநருக்கு நேரமின்மை காரணமாகவே ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகிறார்.

 

சார்ந்த செய்திகள்