தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்திற்குக் கூடுதலாக ரூபாய் 1,805.48 ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக தமிழக அரசால் கூடுதலாக ரூபாய் 1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர். வீடுகளில் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்டு வந்த ரூபாய் 50,000-ஐ ரூபாய் 1,20,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை ரூபாய் 1,70,000- லிருந்து ரூபாய் 2,40,000 ஆக உயர்த்தப்படுகிறது. கட்டுமான பொருட்கள் விலையேற்றம், கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிப்பால் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ரூபாய் 2.40 லட்சத்துடன் 100 நாள் வேலைத் திட்ட நிதி ரூபாய் 23,040, கழிப்பறை கட்டும் நிதி ரூபாய் 12,000 பெறலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 அறிவித்த நிலையில், வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு ரூபாய் 1,805.48 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.