கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு முறை ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அலகில் பணிபுரிந்த ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள், பொறியாளர்கள் என 20 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். அதையடுத்து என்.எல்.சி நிர்வாகம் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள 4, 5, 6, 7 உள்ளிட்ட அலகுகளைப் பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி செய்யப்படாமல் நிறுத்தி வைத்து, முழுவதுமாக பராமரிப்புப் பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததால், இன்று காலை 9.30 மணியளவில் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள, ஏழாவது அலகில் மின் உற்பத்தி செய்வதற்காக வேதமந்திரங்கள் முழங்க, யாகபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் என்.எல்.சி நிர்வாக உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.