மனிதர் வாழ்வியலில் வாரசந்தை என்பது மிகவும் பழமையான முறை. ஒருபொருளை கொடுத்து மற்றொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை என்பது இங்கிருந்து தான் உருவானது. கிராமங்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து ஒருவர் நகரத்துக்கு சென்று பொருளை தேடித்தேடி வாங்க முடியாது என்பதால் கிராமங்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் பெரிய கிராமமாக தேர்வு செய்து அங்கு இப்படிப்பட்ட வாரசந்தை நடைபெறும்.
இங்கு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். மளிகை பொருட்கள், விவசாய பொருட்கள், காய்கறிகள், மரக்கன்றுகள், மாடுகள், ஆடுகள், கோழி என பலதரப்பட்டதும் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், வாங்குவதற்கும் மக்கள் வருவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் இப்படிப்பட்ட குறிப்பாக ஜம்னாமத்தூர், கேளுர் உட்பட சில பகுதிகளில் மட்டும் வாரச்சந்தை நடைபெறுகின்றன. தண்டராம்பட்டு, புதுப்பாளையம், மங்களம், கலசப்பாக்கம் உட்பட திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கும் இப்படிப்பட்ட வாரச்சந்தை நடைபெறுவதில்லை.
இதுப்பற்றி விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தவந்தனர். திருவண்ணாமலை நகரத்தில் கிரிவலப்பாதையில் பெரியளவில் மைதானம் உள்ளது. இதில் வாரச்சந்தை நடத்தலாம், இதனால் விவசாயிகள் பயனடைவார்கள் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்த இடத்தில் கார்த்திகை தீபத்தின் போது மட்டும் 3 நாள் வாரச்சந்தை நடைபெறும், அப்போது குதிரைகள் வரை விற்பனைக்கு வரும். இதுப்பற்றி தற்போதைய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி பரிசீலனை செய்து, உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக வாரச்சந்தை நடைபெற உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வாரச்சந்தை வரும் ஆகஸ்ட் 25ந்தேதி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்துள்ளார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.