ரஷ்யாவிலிருந்து 39 ஆயிரத்து 963 டன் எடையுள்ள பொட்டாஷ் உரம் ஏற்றிக் கொண்டு எம்விபேட் குளோரி என்ற கப்பல் கடந்த 14 ஆம் தேதியன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தது. பின்னர் அந்த பொட்டாஷ் உர மூட்டைகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் அவற்றைப் பிரித்து 120 டன் கொண்ட பொட்டாஷ் மூட்டைகள் 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த 4 லாரிகளும் உரிய குடோன்களுக்குச் செல்லாமல் திடீரென்று மாயமானது.
இது குறித்து கப்பலின் இறக்குமதி நிறுவனத்தின் மேலாளர் ஐயப்பன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தியதில் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகளும் தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த ராஜீவ் நகர் பகுதியிலுள்ள உப்பு குடோனில் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ.சுந்தர் உள்ளிட்ட போலீஸ் டீம் ராஜீவ் நகர் குடோனை சோதனை செய்ததில் துறைமுகத்திலிருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 120 டன் பொட்டாஷ் உரங்களை பிரித்து தரையில் கொட்டி அவற்றை 50 கிலோ வீதம் பிரபலமான உரக் கம்பெனிகளின் பெயரில் போலியான சாக்கு மூட்டைகளில் அடைத்து நெல்லை மாவட்டத்தின் களக்காடு விவசாய பகுதிகளுக்கு கடத்த முயன்றது தெரிய வந்திருக்கிறது.
மேலும் மூட்டை அடைக்கிற வேலைக்காக அந்தப் பகுதியில் உப்பள தொழிலாளர்களை இரண்டு மடங்கு கூலியின் அடிப்படையில் பணியமா்த்தியதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் 60 லட்சம் மதிப்பிலான பொட்டாஷ் உரங்கள் மற்றும் பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட மெஷின்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். இந்த பம்பர் கடத்தல் தொடர்பாக முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாதவன் தூத்துக்குடி மதியழகன் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த போலீசார். தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனர். துறைமுகத்திலிருந்தே கடத்தப்பட்ட இந்த பம்பர் கடத்தல் உப்பு நகரை பரபரப்பாக்கியுள்ளது.