பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.
அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.