மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 61 வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த கோடை விழா வரும் 26 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அதே சமயம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று (21.05.2024) நடைபெற இருந்த படகுப் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படகுப் போட்டியானது வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.