![Poster put up in Chennai against Prime Minister modi visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/IdNEh0PfdhAi3lu-QBe19xMLjNQhaM-0uuNAlz0u-mo/1717047154/sites/default/files/inline-images/Untitled-18_25.jpg)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வரவிருக்கிறார். விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மதியம் தமிழகம் வரவுள்ளார். பின்னர், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி தேர்தல் நடைமுறையை மீறும் செயல், எனவே ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் தேர்தல் ஆணையத்தை நாடுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.இப்படியாகத் தமிழக வரும் பிரதமர் மோடிக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், சென்னை முழுவதும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “தமிழ் மக்களை இழிவுப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா? #GOBACKMODI, இந்தியத் தேர்தல் ஆணையமே தூங்காதே என்ற வாசங்களை அச்சிட்டு, ஹலோ நெட்டிசன்ஸ்...! ரெடி ஸ்டார்ட் 1 2 3..” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்ட பிரதமர் மோடி தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், ஒடிசாவைத் தமிழர் ஆளலாமா? என்று உள்துறை அமித்ஷா கேள்வி எழுப்பியிருந்தார். இது தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.