புதுச்சேரி அருகிலுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நேற்று காலை 4 இளைஞர்கள் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். அதில் 'திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஒரு சில இளைஞர்கள் சுவரொட்டி ஒட்டிய 4 இளைஞர்களை பிடித்து ஆரோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணை மேற்கொண்டதையடுத்து சுவரொட்டி ஒட்டிய 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் பொதுமக்கள் ஆரோவில் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திருச்சிற்றம்பலம் ஊராட்சி பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் சுமூகமாக இருக்கும் சூழலில், இங்கு வெவ்வேறு சமூகத்திற்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் முயற்சியில் ஒரு சிலர் முயற்சித்து வருவதாகவும், அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
காவல் நிலையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.