கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா நேற்று (04-10-23) நடைபெற்றது. இதற்காக கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு, 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணியும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
அதில் பேசிய அவர், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதே இல்லை” என்று பேசியிருந்தார்.
இதற்கிடையில், 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ”இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? என்று கேள்வி எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆளுநருக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85வது பட்டமளிப்பு விழா நேற்று (04-10-23) நடைபெற்றது. இந்த விழாவில், க.பொன்முடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு க.பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “ நந்தனாரை பற்றி அனைவருக்கும் தெரியும். ஒரு முறை நந்தனார், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த போது அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால், அவர் வெளியே நின்று சாமி கும்பிட்டார். அப்போது நந்தியே விலகி நின்று நந்தனாருக்கு தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. அந்த காலத்திலேயே நந்தனார், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் உரிமைக்குரல் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் சமூகநீதியும், அனைவரையும் சமமாக கருத வேண்டும் என்றும் உள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் காலத்திலும் சமூகநீதியை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதே போல், இன்றைக்கு இருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறிவிடுவார்களா?. பூணூலுக்கும் புனிதத்திற்கும் சம்பந்தமில்லை. சமூகநீதிக்கான ஆட்சியை தான் தமிழக முதல்வர் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த கொள்கை இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சமத்துவ கொள்கை ஆட்சியை யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது”. என்று கூறினார்.