புதுச்சேரி - கனகசெட்டிக்குளம் அருகிலுள்ள அணிச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அ.தி.மு.க மாவட்ட மீனவர் அணி இணை செயலாளாராக இருந்து வருகிறார். அவரது மகன் வினோத்ராஜ் (36). அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு காலாப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கீழ் புத்துப்பட்டு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வினோத்ராஜ்(36) அதே பகுதியைசேர்ந்த முகேஷ் (32) என்பவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது கீழ் புத்துப்பட்டு பகுதியில் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. திடீரென இருவரையும் வீச்சரிவாளால் அந்த கும்பல் வெட்டியது. இதில் முகம், கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர். பின்னர் அங்கிருந்து எழுந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் வினோத்ராஜ் உயிர் பிழைக்கக்கூடாது என அந்த கும்பல் தலையில் கல்லை தூக்கி போட்டது. இதனை பார்த்து அருகிலிருந்தவர்கள் கூச்சலிட கொலைக்கும்பல் தப்பியோடியது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வினோத்ராஜின் வீடு சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே உள்ளதால் அவரது உறவினர்களும், ஊர்க்காரர்களும் அங்குவிரைந்து வந்து இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்ராஜ் பரிதாபமாக இறந்தார். முகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கொலையாளிகளை கைது செய்யக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்ப்புத்துப்பட்டு அருகே வினோத்ராஜின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நின்றுகொண்டிருந்த அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வினோத்ராஜ் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். ரவுடிகளுக்குள்ளான முன் விரோததத்தால் கொல்லப்பட்டாரா…? கொன்றவர்கள் தமிழக பகுதியை சேர்ந்தவர்களா…? அல்லது புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகளா? என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.