Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; இன்ஸ்பெக்டர், அரசு மருத்துவர் ஆஜராக உத்தரவு!

Published on 09/04/2025 | Edited on 09/04/2025

 

Pollachi case; Inspector, govt doctor ordered to appear

தமிழகத்தில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும். இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள்  முக்கிய சாட்சியாக இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் சாட்சி விசாரணைகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்தது. அந்த வகையில் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று (09.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்த் தரப்பு சார்பில் வாதத்தை முன் வைக்க நீதிபதி அனுமதியளித்திருந்தார்.

அச்சமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேர் தரப்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் 5வதாக குற்றம்சாட்டப்பட்ட மணிவண்ணன், 6வதாக குற்றம்சாட்டப்பட்ட பாபு ஆகிய இருவர் தரப்பில் சாட்சியங்கள் உள்ளதாகவும் இது தொடர்பாக இருவரை விசாரணை செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் ஆகிய இருவரையும் விசாரிக்கவும், ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் (அடி, தடி வழக்கு) கடந்த 2021ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., மருந்துவமனையின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் ஆகிய இருவரும் வரும் 15ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்படுகிறது. எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்