Skip to main content

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published on 27/08/2018 | Edited on 28/08/2018
m

    

மாங்காடு கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் பூச்சிகடை கடைவீதியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்ட நிலையில் வேறு இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் பல முறை மனு கொடுத்தனர். 
    இந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். 


    கிராம மக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பல முறை கோரிக்கை மனு கொடுத்த பிறகும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் திரண்ட பொதுமக்கள் பூச்சிகடை கடைவீதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை – பேராவூரணி செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை முத்துமாரியம்மன் கோயில் நுழைவாயில் சாலையில் மாற்றி நகரம் கீரமங்கலம் வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டது. வடகாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர்.


    ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 12 மணி வரை நீடித்தது. சாலை மறியலின் போது.. டாஸ்மாக் கடை மாங்காடு ஊராட்சிக்கு வேண்டாம் என்று முழக்கமிட்டனர். மேலும் மாங்காடு ஊராட்சி எல்லைக்குள் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விபத்துகள் எற்பட்டு 3 பேர் இறந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை வந்தால் விபத்துகள் அதிகரிக்கும். அதனால் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர்.


    சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி மற்றம் வடகாடு இன்ஸ்பெக்டர் (பொ) பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 
                


 

சார்ந்த செய்திகள்

Next Story

8 வழிச்சாலை கருத்துகேட்பு தொடக்கம் –நீதிமன்றத்தில் பொய் சொன்னதா மத்தியரசு ?

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
mariyal


சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக மற்றும் தனி நபர்கள் சிலர் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, திட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என பதில் தந்தது. நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் சொல்லியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக செல்லவுள்ள எட்டுவழிச்சாலையை எதிர்த்து செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், சேத்பட், வந்தவாசி, செய்யார் வட்டாரங்களை சேர்ந்த 847 விவசாயிகள் எட்டுவழிச்சாலைக்காக எங்களது நிலங்களை வழங்க முடியாது என எதிர்ப்பு மனுக்களை தந்துள்ளனர்.


எதிர்ப்பு மனு தந்த வந்தவாசி தாலுக்காவை சேர்ந்த 53 விவசாயிகளுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 14ந்தேதி வந்தாசி தாலுக்கா அலுவலகத்துக்கு 38 விவசாயிகள் வந்தனர். அவர்களிடம் தனி வருவாய் கோட்டாச்சியர் வெற்றிவேல் தனித்தனியாக கருத்துக்கேட்டார். வந்தவர்கள் அனைவரும் எங்களால் நிலத்தை வழங்க முடியாது என எதிர்ப்பு கருத்தை பதிவு செய்தனர்.

 

இதனை தொடர்ந்து வரும் 20ந்தேதி செய்யாரிலும், 24ந்தேதி திருவண்ணாமலையிலும், 25ந்தேதி போளுரிலும், 26ந்தேதி செங்கத்திலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளர் அதிகாரிகள்.


நிலங்களை கையகப்படுத்த தடையில்லை, மற்றியவற்றுக்கு இடைக்கால தடைச்சொன்ன உயர்நீதிமன்றத்திடம், சிலதினங்களுக்கு மத்தியரசு, இந்த திட்டத்தில் மாற்றம் செய்வதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. அப்படியிருக்கும் நிலையில் பாதிக்கப்படும் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள் அதிகாரிகள்.


மத்தியரசு நீதிமன்றத்தில், திட்டத்தில் மாற்றம் செய்வதால் இத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளோம் என்றது. அவர்கள் நிறுத்திவைத்துள்ளோம் என்கிறார்கள். அதை மீறி தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அதிகாரிகள் கருத்துக்கேட்கிறார்கள். அப்படியாயின் மத்தியரசின் பேச்சை மீறி மாநில அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடும் அமைப்பினர்.