முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய சொந்த தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை (ஜூன் 8) பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலத்தில் தேவையில்லாத இடங்களில் பாலங்கள் கட்டப்படவில்லை. போக்குவரத்து நெரிசல், விபத்து அதிகம் நடக்கும் இடங்களை கணக்கிட்டே பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.
சேலம் - சென்னை இடையேயான எட்டுவழிச்சாலைத் திட்டம், விரைவுச்சாலை திட்டமாக மாற்றப்பட்டு இருக்கிறது. 40 சதவீத கமிஷனுக்காக இத்திட்டத்தை நான் கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இது ஒரு மத்திய அரசின் திட்டம். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்தான் இந்த திட்டத்தை எடுத்துச் செய்கிறது.
அந்த திட்டத்துக்கு மாநில அரசு உதவி செய்கிறது. அவ்வளவுதான். மேற்கு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தொப்பூர் உள்ளிட்ட சேலம் பகுதிகளில் விபத்துகளால் உயிரிழப்பை தவிர்க்கவும் விரைவுச்சாலை தேவையாகிறது. பயண நேரம் குறைவு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேற்கு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி போன்றவற்றுக்கு இந்த சாலைத்திட்டம் உதவும்.
எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறிய பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்த பிறகு, என் பதிலை கூறுகிறேன். அதுவும் இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னை. முழு ஊடக செய்தியையும் பார்த்துவிட்டுதான் தெரிவிக்க முடியும்.
அதிமுகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. அப்படி இருந்தால் அமமுகவில் இருந்து பிரிந்து வந்து இணைவார்களா? ஊடகங்கள் பரபரப்பு செய்தி தேவை என்பதற்காக ஆளும் எங்கள் கட்சி குறித்த செய்திகளையும், தேவையற்ற விஷயங்களையும் வெளியிடுகிறது. அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது.
இந்த தேர்தலில் அதிகப்படியான எம்எல்ஏக்களை வென்றிருக்கிறோம். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து படிப்படியாக அதிமுகவிற்கு வருகின்றனர். இது வலிமையான இயக்கம். அதிமுக, தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. தொண்டர்கள் ஒவ்வொருவரையும் தலைவர்களாகவே கருதுகிறேன். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அங்கு மணிமண்டப வேலைகள் நடந்து வருவதால், மொத்தமாக செல்லும் நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்து அறிவிக்கும். நான் முதல்வராக பொறுப்பேற்றபோது இந்த ஆட்சி பத்து நாள்களில் கவிழும்; ஒரு மாதத்தில் கவி-ழ்ந்து விடும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் 4 மாதங்கள் கடந்து விட்டது. இந்த ஆட்சி தொடர்ந்து நடக்கும். 2012லும் அதிமுக வெல்லும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.