!["Policy successors should be kept growing"-DMK leader M.K.Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/joc2DCTbeqcHjeruGw5w_1mjWPWJIF6e-XBIpVJEm2A/1690635559/sites/default/files/inline-images/we87_1.jpg)
திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்தும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல்; தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள பணிகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்; சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது ஏவும் மத்திய பாஜக அரசின் போக்கிற்கு வன்மையான கண்டனம்; சமூகநீதிக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் பொதுவெளியில் செயல்படும் ஆளுநருக்குக் கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் இயற்றப்பட்டன.
இந்நிலையில் திமுக இளைஞரணி மற்றும் திமுகவினருக்குத் திமுக தலைவர் ஸ்டாலின் வரைந்துள்ள மடலில், ''கொள்கைப் படைதிரட்டி இனப்பகை விரட்டுவோம். தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது? இன்று எப்படி மாறி இருக்கிறது. இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை. ஓர் இயக்கம்; தலைவர்களின் உழைப்பு; தியாகமே... தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளப்படுத்தி உள்ளது.
இந்த வரலாற்றை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் கடமை திமுகவின் ரத்த நாளங்களான இளைஞரணிக்கு உண்டு. கொள்கை வாரிசுகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கொள்கை வாரிசுகளை வளர்த்துக் கொண்டே இருக்கும் பணியை சிறப்பாக செய்யும் உதயநிதிக்கு வாழ்த்துகள். எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணம், கொள்கையில் வலிமையோடு இருந்தால்தான் இன எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.