கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கோவில்பாளையம் காவல் நிலையத்தின் ஏட்டு ரவிக்குமார் தனிமையில் பேசிக்கொண்டிருந்த சிறார்களை நோட்டமிட்டுள்ளார். உடனே, தனது செல்போனில் சிறார்கள் பேசிக்கொண்டிருந்ததைப் போட்டோ எடுத்தவர், சிறார்களை அழைத்து புகைப்படத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, செய்வதறியாமல் திகைத்து நின்ற சிறார்களிடம் பணம் கேட்டு மிரட்டி, ஆபாசமாகப் பேசி உள்ளார். மேலும், எட்டாம் வகுப்பு படிக்குச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவலரிடம் இருந்து தப்பிய சிறார்கள் நடந்த சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவில்பாளையத்திலேயே ஏட்டு ரவிக்குமாரின் மீது புகார் அளித்தனர்.
புகார் குறித்து விசாரணை நடத்திய கோவில்பாளையம் போலீசார் சூலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றினர். இதையடுத்து, கோவில்பாளையம் ஏட்டு ரவிக்குமார் மீது சூலுார் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. மேலும், போலீசார் விசாரணையில் ஏட்டு ரவிக்குமாரின் குற்றப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. 40 வயதான ரவிக்குமார் மதுரை அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். தற்போது, கோவை சூலுாரில் வசித்து வரும் நிலையில், கோவை மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும்போது இது போன்ற புகார்களுக்கு உள்ளாகி, ரூரல் போலீசுக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ரவிக்குமார் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏட்டு ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் தனியாக நின்று பேசியதைப் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.