பெண் ஒருவரிடம் தகராறு செய்த வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த 3 பேர் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு வந்த போது அரிவாளுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இளைஞர்கள் அந்தந்த காலத்தில் ஏதேனும் ஒன்றின்மீது அதீத ஈடுபாடு கொண்டு அதில் இருக்கும் விபரீதங்களை உணராமல் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாவே கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் டிக்டாக் இளசுகளுக்கு குதுகலத்தை கொடுத்துவருகிறது. அதில் ஈடுபட்டு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அந்தவகையில் தலையாமங்கலம் காவல்நிலையத்தின் முன்பு இருந்த கருவேலம் மரத்தை வெட்ட எடுத்துவந்த அரிவாளுடன் டிக்டாக் ஆடியர்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் கைதாகி இருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பைங்காட்டூரை சேர்ந்தவர் ராஜவேலு இவரின் தம்பி ஐயப்பன் உறவினர் பிரதீப் ஆகிய 3 பேரும் கூலி தொழிலாளிகள். இதில் ராஜவேலுவும், ஐயப்பனும் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த தீபா என்கிற பெண்ணை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கியதாக கூறி அவர்கள் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். தினமும் காலையில் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜவேல், ஐயப்பன் ஆகிய இருவரும் தங்களது உறவினரான பிரதீப் என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று காலை தலையாமங்கலம் காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தனர். அங்கிருந்த போலீசார் ஒரு அரிவாளை எடுத்துக்கொடுத்து எதிரே இருந்த கருவேலம் புதர்களை வெட்டச்சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அரிவாளை வாங்கியவர்கள் காவல்நிலையத்தின் வாசலுக்கு தனித்தனியாக வெளியேவந்த மூன்றுபேரும் அந்த அரிவாளை மறைத்து வைத்திருந்து எடுத்து மிரட்டுவது போலவும், கைகளால் சுழட்டுவது போலவும் "எவனா இருந்தா எனக்கென்ன" என திரைப்பாடலுக்கு அரிவாளோடு வீடியோ எடுத்து அதனை டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தமிழகம் முழுவதும் கசியத் தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் காவல்நிலையம் முன்பு அரிவாளுடன் வீடியோ எடுத்து வெளியிட்ட 3 பேரையும் உடனடியாக பிடிக்க தலையாமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஐந்து பிரிவில் வழக்குபதிவு செய்து மீண்டும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். காவல்நிலையம் ஒரு மனிதனை சீர்படுத்தும் என்கிற நிலைமாறி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் அதை உணராத இளைஞர் கூட்டம் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்து சீர் கெட்டுப் போகிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.