பெரிய வெங்காயம் விளைச்சல் சரிவு மற்றும் பதுக்கல் காரணமாக, வரலாறு காணாத வகையில் அதன் விலை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பெரிய வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு மாதத்திற்கு முன்பு வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம், கடந்த ஒரு மாதமாக கிலோ 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு, எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்து, உள்நாட்டு சந்தையில் விநியோகம் செய்து வருகிறது. இதையடுத்து, இந்திய சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரமாக 80 ரூபாயாக குறைந்துள்ளது. பதுக்கல்காரர்களும் கையிருப்பு வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டு வந்ததாலேயே விலை குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வெங்காய தட்டுப்பாட்டு சீசனை பயன்படுத்திக்கொண்ட சேலம் கோட்டையைச் சேர்ந்த ஹெல்மெட் கடைக்காரர் ஒருவர், தன்னுடைய கடையில் ஹெல்மெட் வாங்கும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பலரும், அவருடைய கடையில் ஹெல்மெட் வாங்க குவிந்தனர்.
சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கெடுபிடியாக நடந்து கொள்வதால், இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்கள்கூட, இலவசமாக பெரிய வெங்காயம் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஹெல்மெட் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், ''சேலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இயல்பாகவே ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தேன். இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஹெல்மெட் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. வெங்காயம் இலவசம் என்பதால், ஹெல்மெட் வாங்குவோரும் பேரம் பேசுவதில்லை,'' என்றார்.