கழிப்பறை தகராறில் மாமனை கொடூரமாக கொலைச் செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45). விசைத்தறி தொழிலாளி. இவருடைய சகோதரி மகன் ஐயப்பன் (29). இவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பார்களாம். இந்நிலையில், அவர்கள் இருவரும் சனிக்கிழமை (டிச. 17ம் தேதி) இரவு, அவர்கள் வீடு அருகே மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஐயப்பன், கீழே கிடந்த கல்லை எடுத்து அசோக்குமாரை தாக்கியுள்ளார். மேலும் அவருடைய தலையை அருகில் இருந்த சுவரிலும் மோதியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அசோக்குமார் அவருடைய வீட்டு முன்பு பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் பள்ளிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஐயப்பனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே ஊரில் ஒருவரின் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் நள்ளிரவில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஐயப்பனிடம் விசாரித்தபோது, “என் வீடும், தாய் மாமன் அசோக்குமார் வீடும் அருகருகே உள்ளது. இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவாக கழிப்பறையுடன் இணைந்த ஒரே ஒரு குளியலறை மட்டுமே உள்ளது. நான் அந்த கழிப்பறைக்குள் இருந்தபோது அசோக்குமார், அந்த கழிப்பறை எங்களுக்குதான் சொந்தம். உன்னால் என் மனைவியும் குழந்தைகளும் குளிக்க முடியவில்லை. நீ வேறு ஒரு கழிப்பறை கட்டிக்கொள் என்றார். இது தொடர்பாக அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டு, மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நானும் அவரும் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது மீண்டும் கழிப்பறை தொடர்பாக பேச்சு வந்தது. ஒருகட்டத்தில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டேன். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.