வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகத்திற்கும், அதே குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்து வரும் மூதாட்டிக்கும் இடையே பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மருத்துவர் சுப்பையா சண்முகம், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல், கரோனா விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்மையில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்த மருத்துவ சுப்பையா சண்முகம், கீழப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் தலைவர் சுப்பையா சண்முகம் மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அறுவறுக்கக்தக்க வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யபட்டுள்ளார். பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் குற்றத்தை மூடி மறைத்து குற்றவாளியை காப்பாற்றி வந்தனர்" என்று கடுமையாக சாடியுள்ளார்.