![ramalingam](http://image.nakkheeran.in/cdn/farfuture/SBItUCZvVFfI2FruJuDeoQOV6K6uSphwoZkOUAHxTG8/1549535050/sites/default/files/inline-images/ramalingam%2002.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை சாலையின் 10வது கிலோமீட்டரில் உள்ளது திருபுவனம். அங்கு 3000த்திற்கும் அதிகமான சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைத்து சமுக மக்களும் இனக்கமாகவே வசித்து வருகின்றனர்.
துாண்டில்விநாயகம் பேட்டை பகுதியைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவர் வாடகை சாமியானா பந்தல் மற்றும் வாடகை பாத்திர கடையை திருபுவனத்தில் வைத்திருக்கிறார் அதோடு பா.ம.க. கட்சியின் திருபுவனம் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர்.
இந்த நிலையில் 5ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்ற ராமலிங்கத்தை ஒரு கும்பல் காரில் வந்து வழிமறித்து ராமலிங்கத்தின் இரு கைகளையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். பலத்த காயத்தோடு துடிதுடித்தவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சரியான சிகிச்சை இல்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் எந்த பயனும் இல்லாம போகும் வழியிலேயே ராமலிங்கம் இறந்து விட்டார்.
அந்தப் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபடுமாறு கூறியவர்களிடம் இராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தால் திருவிடைமருதுார், ஆடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் அதிகமாகியிருக்கிறது. தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. லோகநாதன், தலைமையில் தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பிகள் மூன்று எ.டி.எஸ்.பி., 10 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 200க்கும் அதிகமான போலீசார் குவித்துள்ளனர்.
ராமலிங்கத்தின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என திருபுவனம் கடைவீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று காலை ஒரு கும்பலிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் தங்களது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். வீடியோவில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
திருபுவனம், திருவிடைமருதுார் பகுதியில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு வெறிச்சோடி உள்ளது.
ராமலிங்கம் படுகொலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் இராமலிங்கம் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார் என்பதற்காக இராமலிங்கத்தை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
கொல்லப்பட்ட இராமலிங்கம் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமலிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.