![p.maniyarasan speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/eFnbgPDkSSvAcwVBM1pTIVx1l0bwGJpFZiHy5BsrRBE/1609525635/sites/default/files/inline-images/%3Dreyreytreyt.jpg)
உழவர் உரிமை மீட்புப் போராளி, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மருத்துவர் பாரதி செல்வன் தலைமையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியவாதவது, ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோடிக்கு ஜால்ரா போடுவதும், விவசாயிகளைக் காட்டிக் கொடுப்பதும் போன்ற வேலைகளை மட்டுமே செய்கிறார். எதைக் கேட்டாலும் நான் விவசாயி எனச் சொல்லிக்கொள்கிறார். தயவுசெய்து நான் ஒரு விவசாயி எனச் சொல்லாதீர்கள். அந்தப் பெயராவது நல்லாயிருக்கட்டும். பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்யவேண்டாம்.
நாடு நாடாகச் சென்று முதலீட்டை ஈர்த்தேன் என்று பன்னாட்டு முதலாளிகளை இங்கு கொண்டு தொழில் தொடங்கச் சொன்னவர்தான் நீங்கள். நான் இவ்வளவு முதலீடு ஈர்த்தவன் என்று தமிழக முதல்வரும், மோடியும் சொல்கிறார்கள். ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளோ நீங்கள் அதிக முதலீட்டை ஈர்க்கவில்லை எனச் சொல்லுகிறார்கள். அதற்கு என்ன பொருள், அதிகமாக நாட்டை விற்கிறீர்கள் என்பதுதான் பொருள்.
![p.maniyarasan speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/KsLOH0BB3UPaFDJvvA_Iihk0wHfG7bZNcBkKhL9PNcs/1609525799/sites/default/files/inline-images/tryutry7tryrut.jpg)
ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வந்தால் என்னவாகும்? மோடி திட்டமும் மன்மோகன் சிங் திட்டமும் ஒன்றுதான். அவர்கள் கிராமங்களை அழிக்க நினைக்கிறார்கள். கர்நாடகத்தில் விளைவித்த நெல்லைக் கொண்டு வந்து தமிழகத்தில் உள்ள டி.பி.சி.யில் விற்கிறார்கள். விவசாயிகள் விளைவித்த பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம், மறைமுகமாக அம்பானி, அதானிகள் பதுக்கலாம். அதற்காகத்தான் நாடு முழுவதும் 28 இடங்களில் லட்சக் கணக்கான டன் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து மோடி விவசாயிகளிடம் கருத்துக் கேட்டாரா? இப்படிப்பட்ட சட்டம் வேண்டும் என விவசாயச் சங்கத்தினர் யாராவது கோரிக்கை வைத்தார்களா? யாரும் வைக்கவில்லை அம்பானி, அதானி வைத்த கோரிக்கைக்காக நிறைவேற்றப்பட்டதுதான் இந்த மூன்று வேளாண் சட்டமும்" என்று விளாசினார்.