![pm narendra modi arrives chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/9fEGxSxZ_0qGCTwTT-QW6l0-V4wIJJiRr0HE7CAOc4E/1614222767/sites/default/files/inline-images/pm124.jpg)
புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இன்று (25/02/2021) நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்குப் புறப்பட்டார். இன்று (25/02/2021) காலை 10.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, புதுச்சேரி நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நகர் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்களும், புதுச்சேரி காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25/02/2021) பிற்பகலில் கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழகத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், நெய்வேலியில் இரண்டு புதிய 500 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள், தென் மாவட்டங்களில் 709 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், வ.உ.சி. துறைமுகத்தில் 8 வழிப்பாதை கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.