தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடச்சியாக, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 25- ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, கோவை மாவட்டம் கொடிசியாவில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, கொடிசியாவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான கிஷன் ரெட்டி, இணைத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே.சிங், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 1- ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமரின் தமிழக வருகையின் போது, அரசின் பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பா.ஜ.க. வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.