திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்று (02-01-24) நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசியதாவது, “அழகிய மாநிலமான தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தான். பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். பட்டமளிப்பு என்பது தமிழ்நாட்டுக்கு பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.
சங்க காலத்தில் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள், பாடல்கள் அரசர்களால் ஏற்கப்பட்டு அதை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வுக்கு பிறகு பாடல்களை இயற்றிய புலவர்கள், இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைதான் தற்போதும் கல்வித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பண்டைய காலத்திலேயா காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்படிப்பட்ட மாபெரும் அறிவுசார் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வருபவர்கள் தான் இன்றைய மாணவர்கள். மேலும், நாட்டுக்கு புதிய திசை வழியை காட்டும் முக்கிய பணியை நிறைவேற்றுபவை தான் பல்கலைக்கழகங்கள்.
‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசன் பாடல் வரிகளின்படி இந்தியா புதிய உலகம் படைத்து வருகிறது. நாடு தாக்கப்படும் போதெல்லாம் நமது அறிவு செல்வத்தின் அடிப்படை குறிவைக்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் கற்கும் அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவக்கூடும். மாணவர்கள் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம் சிக்கலான பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். மாணவர்கள் கற்றுக்கொள்ளும் பொருளாதாரம் வறுமையைக் குறைக்க உதவும்.
தற்போது இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா புதிய உயரங்களை படைத்து வருகிறது.. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்குகளாக உயர்ந்திருக்கிறது. அந்த வகையில், 74ஆக இருந்த விமான நிலையங்கள் தற்போது 150ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வேகம் மற்றும் திறமைக்கு ஈடாக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மேலும், இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகியுள்ளது” என்று கூறினார்