மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு டிஜிபி சேலம் சரக காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆலோசனை நடத்தினார்.
காவல்துறையின் தேர்தல் பணி ஆய்வுக்கூட்டம் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 6, 2019) நடந்தது. வரும் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு காவல்துறை டிஜிபி விஜயகுமார், விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் சேலம் மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர்கள் ஆகியோரிடம் விரிவான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தார். தேர்தலின்போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.