தமிழகம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி பிப்ரவரி 7,8 தேதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காட்டில் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் வன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் பறவைகள் வல்லுநர் முனைவர் சம்பத், வனவர் ஞானசெல்வி, வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஆறுமுகம், சங்கர், வனக்காவலர்கள் ராஜாராம், ரமேஷ், கஜேந்திரன் படகு ஓட்டுநர்கள் மாரி, முத்து குமரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இரு நாட்களாக காலை, மாலை என இருவேளை நேரங்களில் பிச்சாவரம் காட்டிற்கு வந்து செல்லும் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 100க்கும் மேற்பட்ட பறவைகளின் இனம்காணப்பட்டு கணக்கிடப்பட்டனர். இவற்றில் 10 வெளிநாட்டு பறவை இனங்கள் பிச்சாவரம் வனபகுதிக்கு உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வந்து செல்கின்றன என்பதை அறியப்பட்டனர். மேலும் பிச்சாவரம் காட்டில் வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பறவைகள் வந்து தங்கி இனபெருக்கம் செய்து செல்லும் வகையில் சூழலை ஏற்படுத்தப்படும் என்று வனஅலுவலர் தெரிவித்துள்ளார்.