தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, அரசு வேலை, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அல்லது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை போன்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், அதன் மதுரை கிளையில் 10 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தனித்தனியாக விசாரிப்பதற்கு பதிலாக, அனைத்து வழக்குகளையும் சென்னையில் விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதனை கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அரசின் கோரிக்கையை நீதித்துறை பதிவாளரிடம் மனு கொடுக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை ஜூன் 6ஆம் தேதி வரும்போது, வழக்குகள் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்து என்பது அப்போது தெரியவரும்.