திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள திருச்செந்தூர் பெட்ரோல் பங்கில் நேற்று மாலை (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறி உள்ளனர். இதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அரிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விக்னேஷ், பார்த்திபன், மணிவாசன் மற்றும் ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் ஒருவருரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.