கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. 'பிராது' கட்டுவதில் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த 4 மாத காலமாக ஊரடங்கை முன்னிட்டு கோயில் மூடப்பட்டுள்ளது. அதேசமயம் கோயில் குருக்கள் பூஜைகள், வழிபாடுகள் செய்து வந்தனர்.
இதனிடையே ஊரடங்கு காலத்தில் கோயில் பூட்டப்பட்ட நிலையில் கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலரான சிவக்குமார் மற்றும் சிலர் கோயில் நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு, மாமிசம் உண்பது, புகை பிடிப்பது இயற்கை உபாதைகள் கழிப்பது என சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதையடுத்து இது குறித்து விசாரணை செய்த விழுப்புரம் இந்து அறநிலையத் துறை ஆணையர் செந்தில்வேலன், கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் கோயில் வளாகத்தில் அமர்ந்து மது, மாமிசம் உண்பது பக்தர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ள நிலையில், 2 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.