கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இந்தியா முழுக்க 75 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மூன்று மாவட்டங்கள் அடங்கும்.
இந்த நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ மனையாக மாற்றப்படுகிறது என்றும் இங்கு ஏற்கனவே வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு சிகிச்சை பெறுவோர் அவர்கள் விருப்பப்படி வேறு மருத்துவமனைக்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
இங்கு சுமார் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை முழுமையாகவே கரோனா வைரஸ் தாக்கம் கொண்டவர்கள் சிகிச்சை பெறும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுகிறது" என கூறினார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனியாக ஒரு மருத்துக் கல்லூரி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.