புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், நிதி ஆதாரத்திற்காகவும் பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டிற்காக வழங்கும் நிதியை ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளோம்.
புதுச்சேரிக்கு அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். முழு நிதிநிலை அறிக்கையை தயாரிக்க தலைமை செயலாளரிடம் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கேரளாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து புதுச்சேரி கடற்பகுதி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல் போதைப்பொருட்கள் விற்பனை யை தடுக்கவும், கண்காணிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளதால் புதுச்சேரி மாநிலத்திற்கு தகுந்த ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்குமா...? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, " பிரதமர் வெற்றி பெற்றவுடன் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியிருந்தார். ஆகவே நாங்கள் பிரதமரோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் தயாராக இருக்கிறோம். , அதேசமயம் மத்திய அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும், மாநிலத்தின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.