தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலையை 8-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் உடைத்து தலையை சேதப்படுத்தினர்.
இந்த தகவல் வேகமாக பரவியதால் தி.க, தி.மு.க, உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களும்கூடி சாலை மறியல் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். பெரியார் சிலை அருகே பதற்றம் அதிகரித்து வந்ததால் அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், மற்றும் வருவாய் துறையினர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மதியம் 12 மணிக்கு நடந்த பேச்சுவார்த்தையில் சிலையை உடனே சீரமைத்துக் கொடுப்பது என்றும் சிலையை உடைத்த உண்மை குற்றவாளிகளை கைது செய்வது என்றும் வருவாய்துறை அதிகாரிகள் மெய்யநாதன் எம்.எல்.ஏ.வுக்கு உத்தரவாதம் எழுதிக் கொடுத்ததால் பதற்றம் தனிந்தது. அதன் பிறகு தி.மு.க மாவட்டசெயலாளர் பொருப்பு ரகுபதி எம்.எல்.ஏ, அ.ம.மு.க அறந்தாங்கி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி மற்றும் பலரும் அங்கு வந்து சிலையை சீரமைக்கவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் அன்று மாலையே சுவாமிமலையில் இருந்து சிற்பிகள் அழைத்து வந்து சிலை சீரமைப்பு பணிகள் நடந்தது. சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர் போலீசார்.
பெரியார் சிலை முற்றிலும் சீரமைக்கப்பட்டு புதிய வண்ணம் தீட்டப்பட்ட நிலையில் இன்று ரகுபதி எம்.எல்.ஏ, மெய்யநாதன் எம்.எல்.ஏ, சி.பிஎம். மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாஜி உதயம் சண்முகம், தி.மு.க இலக்கிய அணி வழக்கறிஞர் வெங்கடேசன், மற்றும் திராவிடர் கழகம், சிபிஐ, உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டுவந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மெய்யநாதன் எம்.எல்.ஏ, மற்றும் சி.பி.எம். மாவட்ட செயலாளர் கவிவர்மன் ஆகியோர், அதிகாரிகள் சொன்னதுபோல சிலை சீரமைத்துக் கொடுத்துவிட்டார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். ஆனால் 4 நாட்களாகியும் இன்னும் சிலையை உடைத்த கயவர்களை கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்யவில்லை என்றால் பிரமாண்ட பேரணியுடன் போராட்டம் நடத்தவும் இந்த கூட்டணி தயாராக உள்ளது. ஆனால் காவல்துறை தரப்பில் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்கப்படுகிறது. விரைந்து உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்றனர்.