கடந்த ஆண்டு (16/11/2019) இதே நாளில் கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் தென்னை விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தென்னை சார்ந்த தொழிலாளிகள் இன்றளவும் வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பேராவூரணி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து படித்து வெளிநாடு, வெளியூர்களில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் புயல் அடித்து நம்மை படிக்க வைத்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டது என்பதை அறிந்து சொந்த ஊர்களுக்கு வந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மாற்று கன்றுகளை நட்டு முடிக்கும் போது தண்ணீர் பிரச்சனை எழந்தது.
பல வருடங்களாக காவேரித் தண்ணீரும் கடைமடைக்கு வருவதில்லை. அதனால் தான் தென்னைக்கு மாறினோம். 30 வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்படாத ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்குவதில்லை. அதனால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. நட்ட தென்னை, தேக்கு, பலா, மா என்று மரக்கன்றுகளை வளர்க்க தண்ணீர் வேண்டுமே.. என்ன செய்வது ஆலோசித்தார்கள் இளைஞர்கள்.. நமக்கு நாமே நிலத்தடி நீரை சேமிக்களாமே என்று முடிவெடுத்தனர். அதன்படி கைஃபா என்ற அமைப்பு உருவானது.
நிலத்தடி நீரை சேமிக்க ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் என்ற நிலையில் முதலில் 560 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரிய குளத்தை மீட்க முடிவெடுத்து களமிறங்கினார்கள். சில மாதங்களில் குளத்தை மீட்டனர். மீட்டு முடிந்த போது கல்லணை தண்ணீர் வந்து சேர்ந்தது. குளம் நிரம்பியது. கைஃபா வை தொடர்ந்து பல கிராமங்களிலும் இளைஞர்கள் கூடி நீர்நிலைகளை பாதுகாக்க சொந்த பணத்தையும், உழைப்பையும் மூலதனமாக்கி மீட்டனர். மீட்கப்பட்ட நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகளை வளர்க்கவும், நீர்நிலைகளின் குருங்காடுகளையும் வளர்க்க அடுத்த திட்டம் வகுத்தனர். அதன்படி குருங்காடுகள் அமைக்கப்பட்டது.
இன்று நவம்பர் 16 கஜா ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேராவூரணி பெரிய குளத்தின் கரையில் ஒரு கி.மீ தூரத்திற்கு குழந்தைகள், தம்பதிகள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், கைஃபா அமைப்பினர், விவசாயிகள் என்று அனைவரும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டனர். புயலில் இழந்த மரங்களைவிட 5 மடங்கு மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றனர் இளைஞர்கள்.