ரஜினி அரசியல் வருகை குறித்து நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று (12.03.2020) ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருச்சி அடுத்த மணப்பாறையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்தவர் பாபா முருகேஷ். இவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு வயது 52. மிகத் தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினியின் அரசியலை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று ரஜினியின் பேட்டிக்கு பிறகு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து மணப்பாறை ரஜினி மன்ற நகர செயலாளர் கணேசனிடம் பேசினோம்.
கணேசன் நம்மிடம், "இன்று அதிகாலை பாபா முருகேசன் திருச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக மணப்பாறைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கேர் கல்லூரி அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடல் முழுவதும் காயமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் ரஜினியின் பேட்டியை செல்போனில் நேரலையாக பார்த்த பாபா முருகேசன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்ட திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும் வருத்தம் அடைந்து உள்ளோம்.
பாபா முருகேசன் தன் வாழ்நாள் ஆசையாக தலைவர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது.
சில நாட்களுக்கு முன்பு தலைவர் ரஜினியை பார்க்க முடியாமல் போனால் ஒரு வேலை எனக்கு இறப்பு ஏற்பட்டால் ரஜினி மன்றத்தின் கொடியை என் உடல் மீது போர்த்தி என்னை அடக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
பாபா முருகேசனுக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அரசியல் பிரவேசம் பத்திரிகையாளர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினி மன்றத்தின் நிர்வாகி விபத்தில் சிக்கி மாரடைப்பில் இறந்த இந்த சம்பவம் மன்ற நிர்வாகிகள் இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.