புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி நகரம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், புள்ளாண்விடுதி, பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்பட ஆலங்குடிக்குக் கிழக்கே உள்ள அனைத்து கிராமங்களிலும், அதே போல பேராவூரணி தொகுதியில் பைங்கால், ஆவணம், திருச்சிற்றம்பலம், களத்தூர், குருவிக்கரம்பை உள்பட ஏராளமான கிராமங்களிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாதத்தில் மொய் விருந்துகள் நடத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் வாங்கிய மொய்ப் பணத்தைத் திரும்பச் செய்யும் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் காய்கறி, மளிகை, விறகு, சமையல், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. மொய் விருந்துகள் செய்து விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்வது, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதமும் மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக கஜா புயல் பாதிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மாத மொய் விருந்துகள் நடத்தப்படாமல் நூற்றுக்கணக்கானோர் கடனில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், இந்த வருடம் ஆடி மாதம் பிறந்த போது மொய் விருந்துகள் நடத்துவது பற்றி எந்த அறிவிப்பும் வராத சூழலில், தற்போது சிலர் மொய் விருந்து பத்திரிக்கைகள் அச்சடித்து ஊரெங்கும் கொடுத்துவிட்டு விருந்து நடத்தத் தயாராக உள்ளனர். இந்த சூழலில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மொய் விருந்துகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் மொய் விருந்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் தயாராக இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து மாங்காடு கிராமத்தில் மொய் விருந்துக்காகத் தயாராகி திடீரென ஆட்சியர் அறிவிப்பால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளவர்கள் கூறும் போது, “ஆடி மாதம் பிறந்த போதே மொய் விருந்துகள் நடத்தத் தடை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தால் யாரும் அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திடீரென அறிவித்திருப்பதால் சில நாட்களில் மொய் விருந்து நடத்த பத்திரிக்கை கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் கடன் வாங்கி முன் ஏற்பாடுகளுக்காகச் செலவு செய்துள்ள நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாக தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. மொய் விருந்து பத்திரிக்கைகளை வெளியில் கொடுத்துள்ளவர்களுக்கு அனுமதி அளித்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மொய் விருந்துகளை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க விசாலமான சாப்பாடு மற்றும் மொய் பந்தல் அமைத்துள்ளனர். கிருமிநாசினி, மாஸ்க் வைக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இருப்பினும், வேறு வழி இல்லாததால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறோம். ஆனால் மீண்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றனர்.