காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் கபினி, கே.எஸ்.ஆர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துவருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பத்து மாவட்டங்களில் உள்ள 49 முகாம்களில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக காவிரி ஆற்றின் கரையோர மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்டுவருகின்றனர். காவிரி உபரி நீரை சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.