உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆமூர், கொளத்தூர், துளக்கம்பட்டு, குப்பம் ஆகிய கிராமங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரி 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு இல்லத்தை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நி்றுத்தியதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றனர். இதை அருகில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
இதை அறிந்த வட்டாட்சியர் காதர்அலி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு சுமூக தீர்வும் எட்டப்படாததால், சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இல்லம் வந்த குமரகுரு, உங்கள் பகுதி தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே இருக்க வேண்டும். அப்படி தொடர்ந்தால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு மருத்துவக்கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது அமைந்தவுடன் நம் பகுதி மாணவ மாணவிகள் அதிகமான பேர் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்.
அதைக் கேட்ட இளைஞர்கள் சிலர் நீட் தேர்வு வைத்து, தமிழக பிள்ளைகளே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலையில் இங்கு மருத்துவக்கல்லூரி வந்தால் மட்டும் எப்படி நம் பிள்ளைகள் அதிகமாக பயனடைய முடியும் என்று எதிர்த்து கேள்வி கேட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. நீங்கள் சொல்கின்ற கோரிக்கைகளை நான் அரசிற்கு தெரிவிக்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.