காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம், விஷார், களக்காட்டூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விஷார் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் இங்கு நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 50 பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறினார்கள். அதை கேட்டு டென்ஷன் அடைந்த அமைச்சர் சக்கரபாணி உடனடியாக முதல்வன் திரைப்பட பாணியில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய பணம் பெற்ற அலுவலர், உதவியாளர், காவலர், ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.