![ma subramanian](http://image.nakkheeran.in/cdn/farfuture/F1fbKCRVdeWtmmZWDdAKZ4k4HmLwbM1o2RfNzGJE1WQ/1630736812/sites/default/files/inline-images/103_10.jpg)
கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மூடியிருந்த பள்ளிகள், கல்லூரிகள் தற்போது தீவிரமான கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைப் பொறுத்தவரை 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் மட்டும் 50 சதவிகித அளவில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கல்லூரிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றிவருகின்றன.
இந்த நிலையில், அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 5 பேருக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், விருத்தாசலத்தில் இரு ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா மூன்றாம் அலை குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என ஏற்கனவே வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பள்ளிக்கு வந்ததால் மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறிய அவர், தொற்றுக்குள்ளான மாணவிகள் பயின்ற பள்ளிக்கு சீல் வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.