கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.
அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில் கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.
மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.
சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.