Skip to main content

பட்டா பெயர் மாற்ற நூதன முறையில் லஞ்சம்; தப்பி ஓடிய விஏஓ!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

patta name transfer incident at kallakurichi karadi chittur vao involved 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்குச் சொந்தமான நிலம் அவரது முன்னோர்கள் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்து வந்துள்ளது. அதை தனது பெயருக்கு தனிப்பட்டவாக மாற்றம் செய்து தரக்கூறி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தார். அவரது மனு சம்பந்தப்பட்ட கரடி சித்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா பட்டா மாற்றம் செய்து தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் வெங்கடேசன் நேரில் சென்று பட்டா மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா, வெங்கடேஷனிடம் பட்டா மாற்றம் செய்து தர பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று பேரம் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் பட்டா மாற்றம் செய்ய ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய வெங்கடேசன் உடனடியாக கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கடந்த 24ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவிடம் கொடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

 

அதன்படி வெங்கடேசன் லஞ்சப் பணத்துடன் கரடி சித்தூர் சென்றுள்ளார் அங்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை அவரை வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வெங்கடேசனை கச்சராபாளையம் வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் கூறிய இடத்தில் அவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  கரடி சித்தூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சற்று தூரத்தில் நிற்பதை சுட்டி காட்டி அவர் லஞ்ச பணத்தை வாங்கி வருமாறு என்னிடம் கூறியுள்ளார் என்று பணத்தைக் கேட்க அதன்படி வெங்கடேசன் பொன்னுசாமி இடம் கிராம நிர்வாக அலுவலருக்கு சேர வேண்டிய பத்தாயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் பொன்னுசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

 

போலீசார் பொன்னுசாமியை மடக்கிப் பிடித்த காட்சியை சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பொன்னுசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு இடைத்தரகராக இருந்து பொதுமக்களிடம் லஞ்சப் பணம் வசூல் செய்து கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதை பொன்னுசாமி கிராம நிர்வாக அலுவலர் கூறி அவருக்காக பணத்தை பெற்றதாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்