வேலூர் மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த என்.ஜி.பார்த்திபன், ஜெ. மறைவுக்கு பின் அதிமுக உடைந்தபோது, டிடிவி தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த பிரச்சனையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவராக மாறிப்போனார் பார்த்திபன். அந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 18ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் ஏற்கனவே நின்று பதவி இழந்த வேட்பாளர்களையே அமமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சோளிங்கர் தொகுதிக்கு மட்டும் காவேரிப்பாக்கம் ஒ.செ. டி.கே.மணி என்பவரை அறிவித்துள்ளார் தினகரன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பார்த்திபனை, அரக்கோணம் தொகுதி எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இதுப்பற்றி அமமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, சோளிங்கர் தொகுதியில் மீண்டும் நின்றால் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதால் எம்.எல்.ஏவுக்கு நிற்கவில்லை. அதேநேரத்தில் தேர்தல் களத்தில் இருந்து பயந்து ஓடிவிட்டார் என யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக எம்.பி தேர்தலில் நிற்கிறேன் என பார்த்திபன் கூறியதன் விளைவாக அரக்கோணம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொகுதியில் வன்னியர்கள், பட்டியலினத்தவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் வாக்குகள் கணிசமாக உள்ளன. அதனை குறிவைத்தே களத்தில் இறங்கியுள்ளார் பார்த்திபன். அந்த வாக்குகளை வாங்கி தன் சாதி பலத்தை காட்ட நினைக்கிறார் என்கிறார்கள்.