Skip to main content

பொங்கல் போனஸ் இல்லை என கைவிரித்த அரசு.... சோகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்...!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் 9 கல்வியாண்டுகளாகப் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழக்கம்போல இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் தராமல் தமிழகஅரசு புறக்கணித்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

part-time-teachers-pongal bonus-issue

 



இதுகுறித்து  தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், பொதுவாக ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்கிவருகிறது. போனஸ் திட்டத்தில் வராதவர்களுக்கும் மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. அதைப்போலவே அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாளர்களுக்கு அரசின் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தினக்கூலிப் பணியாளர்களுக்கும், ஒப்பந்தமுறை பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும், பகுதிநேர ஊழியர்களுக்கும், அந்தந்த துறைகளில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும்   பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொடர்ந்து போனஸ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அனைத்துவகை பணியாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க அனைத்துவகை பணியாளர்களுக்கும் ஒதுக்கப்படும் போனஸ் நிதியை, இந்த துறையிலே பலஆண்டுகளாக பகுதிநேரமாக பணியாற்றிவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பாராபட்சமின்றி போனஸ் தரப்பட வேண்டும்.

 



எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி உடனடியாக பொங்கல் போனஸ் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தமிழகஅரசின் கடமையாகும், மனிதநேயமும்கூட. எனவே முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

போராட்ட நாட்களில், பள்ளிகளை திறக்க இந்த பகுதிநேர ஆசிரியர்களையே அரசு எப்பொழுதும் பயன்படுத்தி வருகிறது. இது தவிர எல்லா வகையான பள்ளிப் பணிகளிலும் இந்த பகுதிநேர ஆசிரியர்களையே பயன்படுத்தி வருகிறது. ஆனால் அனைவருக்கும் கிடைக்கும் பணப்பலன்களை பகிர்ந்து தராமல், தரமறுப்பது மனிதநேயமா என்ற மனக்குமுறல் தற்போது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே 9 கல்வியாண்டுகளாக  மே மாதம் சம்பளம் மறுக்கப்பட்டுவரும் நிலையில், ஒவ்வொரு முறையும் போனஸ்கூட தராமல் மறுக்கப்பட்டு வருவது மீளாத சோகத்தில் ஆழ்த்துகிறது.எனவே இக்குறையை போக்கி அரசு மனிதநேயத்துடன் போனஸ் வழங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்