கனமழையால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருக்கிறது. பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்ற பிறகு விடுமுறை என அறிவித்திருப்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது,குறிப்பாக, நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. 21ம் தேதி அதிகாலை முதல் இன்று வரை இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகள் செயல்பட முடியாத படி பெரும்பாலான அரசு பள்ளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதோடு பள்ளிக்குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்றுவர முடியாது என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் 22 ம் தேதி காலை 8.30 மணிக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் எரிச்சல் அடையவே செய்திருக்கிறது.
இது குறித்து குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்சென்று வீடு திரும்பிய பெற்றோர் கூறுகையில், " என்ன மாவட்ட நிர்வாகமோ புரியவில்லை, நான்கைந்து நாட்களாக நல்ல மழை பெய்கிறது, அதிலும் நேற்று இடைவிடாமல் மழை பொழிந்திருக்கிறது. இன்றும் மழைத்தொடரும் என்று வானிலை செய்தி வெளியாகியிருக்கிறது, இதை முன்கூட்டியே உணர்ந்து விடுப்பு அறிவிக்கக்கூட விவரமில்லாத மாவட்ட நிர்வாகமாக இருப்பது வேதனையளிக்கிறது, காலையில் மழையில் நினைந்துக்கொண்டே பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தோம், தனியார் பள்ளி நிர்வாகம் பேருந்துகளை அனுப்பி குழந்தைகளை அழைத்து வருவர், அரசு பள்ளி குழந்தைகள், மாணவர்கள் அரசு பேருந்துகளில் ஏறி பள்ளிகளுக்கு சென்றனர், இந்த நிலமையில் 8.30 மணிக்கு விடுமுறை அறிவித்தால் என்ன ஆகும். குழந்தைகள் திரும்பி வரவே மதியமாகிடும், எவ்வளவு சிறமம், இதைக்கூட உனராத நிர்வாகம் என்ன நிர்வாகமோ," என எரிச்சலோடு சென்றார்.