Skip to main content

காவிரி படுகையில் கெயில் திட்டத்தை கைவிடா விட்டால் மிகப்பெரிய போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை!

Published on 18/03/2018 | Edited on 18/03/2018


காவிரி படுகையில் கெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடா விட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிளான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள், அதற்கான அடுத்தக்கட்டமாக எண்ணெய்க் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலைநிலங்களை பாதிக்கும் இக்குழாய்ப் பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. அப்போதே விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து புதிதாக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்த ஓஎன்ஜிசி நிறுவனம், அந்த உறுதிமொழியை மீறி, இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. அதன்தொடர்ச்சியாக அடுத்த அதிர்ச்சி வெடிகுண்டை வீசியிருக்கிறது கெயில் நிறுவனம். மாதானம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணறுகளில் எடுக்கப்படும் எண்ணெயை நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்வதற்காக மாதனத்திலிருந்து தரங்கம்பாடி பகுதியிலுள்ள மேமாத்தூர் வரை 29 கி.மீ. நீள குழாய்ப் பாதை அமைக்கப்படும் என்பது தான் கெயில் வீசிய அதிர்ச்சி குண்டு ஆகும். குத்தாலம் பகுதியில் உள்ள கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்ல நரிமணம் வரை குழாய்ப் பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கிறது. மாதானத்திலிருந்து புதிய பாதை அமைத்து மேமாத்தூரில் இப்பாதையுடன் இணைப்பது தான் கெயில் நிறுவனத்தின் திட்டமாகும்.

இதற்காக பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட 17 ஊர்களில் 112 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி கெயில் நிறுவனத்திற்கு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளால் அதைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதானம் பகுதியில் எண்ணெய் மட்டுமின்றி, இயற்கை எரிவாயுவும் எடுக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் வயல்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருப்பதால் மாதானம் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாற்றப்படுகிறது.

மாதானம் பகுதியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. எண்ணெய்க் கிணறுகள், எண்ணெய்க் குழாய்ப் பாதைகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், மீத்தேன் வயல்கள் என, பசுமைக்கு பெயர்போன காவிரி படுகையை பாலைவனமாக்கும் செயல்களை மட்டுமே மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் தங்கள் நிலங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்கப் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, பொய் வழக்குகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது மேற்கொள்ளப்படும் சீரழிவுகள் போதாது என 110 எண்ணெய்க் கிணறுகள், வேளாங்கண்ணி முதல் மரக்காணம் வரை 24 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றையும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக மத்திய அரசுக்கு அடிமை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத் தகுதியற்ற, பாலைவனங்களாக மாறி விடும் என்பது உறுதி. இதை தமிழக அரசு எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; அத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தித் தரும் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவற்றை இரு அரசுகளும் செய்யத் தவறினால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிளான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்