தமிழகத்து ஆவின் பால், நெய் மற்றும் அதன் உபபொருட்களான இனிப்பு வைகைகள், விற்பனைப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டு, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில், விற்பனையாகிறது. இதனைத் தொடர்ந்து, ஹாங்காங்கிலும், மஹாராஜா நிறுவனத்தைச் சேர்ந்த அருண் என்பவரை மொத்த விற்பனை முகவராக நியமித்து, ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஆவின் உயர் அதிகாரிகளோடு ஹாங்காங் சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் அறிமுக விழாவில் “ஆவின் நிறுவனம் அம்மாவின் செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தது. முதல்வர் பழனிச்சாமியும் அதுபோன்ற ஒரு அக்கறையை ஆவின் மீது காட்டி வருகிறார். அதனால்தான், மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் கால் பதித்திருக்கிறது ஆவின். முதலில், 15 நாட்களுக்கு ஒருமுறை 18000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கண்டெய்னர்களில், டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பாலை, விற்பனைக்காக ஹாங்காங் அனுப்பவிருக்கிறோம். நாடு முழுவதும் சப் டீலர்கள் நியமனம் செய்யவிருக்கிறோம். அதன்பிறகு, நிச்சயமாக ஏற்றுமதி அதிகரிக்கும். ஆவின் பொருட்களுக்கு இந்த நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்தகட்டமாக, கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் ஆவின் விற்பனையைத் தொடங்குவோம்.” என்று கூறியிருக்கிறார்.
விழா முடிந்ததும், ஹாங்காங்கில் வாழும் தமிழர் ஒருவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், “ரகசிய போலீஸ் 115 திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ‘பால் தமிழ்ப்பால்’ என்று பாடி நடித்தார்கள். உலக மொழிகளில் தமிழ் முதன்மையானது. உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் தமிழ்ப்பாலும் (ஆவின்) சுவையானதே! ஆவின் ருசியை ஹாங்காங் நாட்டு மக்களும் உணரும் தருணம் வந்துவிட்டது” என்று சுவைபட பேசியிருக்கிறார்.
ஹாங்காங் நாட்டின் துணைத் தூதர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் சிலரும் அந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.