Skip to main content

"அரசு அலுவலர் தேர்வாணையத் தேர்வுகளை அனைத்து  மொழிகளிலும் நடத்த வேண்டும் "- திருச்சி சிவா வலியுறுத்தல். 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
trichy siva



நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 3-ந்தேதி பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, " அரசு அலுவலர்களுக்கான தேர்வு ஆணையத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் " என்று  வலியுறுத்தினார். அவருடைய கருத்தை பல்வேறு மாநில உறுப்பினர்களும் ஆதரித்துப் பேசினர்.

 

திருச்சி சிவா பேசும் போது, " இந்திய அரசின் கீழ் இயங்கிவரும் அரசு அலுவலர் தேர்வாணையம் ,  அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளுக்குமான அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பான அமைப்பாக உள்ளது. துறை அலுவலங்களுக் கான அலுவலர்களையும் அது தேர்வு செய்து வருகிறது.
 

 ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர் ஆணையம் அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்களைத் தேர்ந்தெடுப்ப தற்காக தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
 

இந்த தேர்வாணையம் அலகாபாத், டெல்லி, கல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் கவுஹாத்தி ஆகிய ஏழு மண்டல அலுவலகங்களையும் இரண்டு துணை மண்டல அலுவலங்களையும் பெற்றுள்ளது. மண்டல (Zonal) அளவில் தேர்வுகளை நடத்தி வந்த தேர்வாணையம், தற்போது இந்தத் தேர்வுகளை தேசிய அளவில் நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதால், நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த இந்தி அறியாத மாணவ-மாணவிகள் அரசுப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெற முடியாத நிலைமை உள்ளது. அதன் மூலம்  வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. 
 

அதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் திறமைசாலிகளாகவும் மிகவும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும் இந்தி தெரியாத காரணத்தால் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
 

மத்திய அரசின் தேர் வாணையக் குழுத் (யு.பி.எஸ்.சி.,) தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிற போது, அரசு அலுவலர் தேர்வாணையத்தால் எல்லா மாநில மொழிகளிலும் தேர்வுகளை ஏன்  நடத்த முடியாதா? அதே போன்று நேர்முகத் தேர்வுகளையும் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த முடியாதா? இவை பெருமண்டல  அளவில் நடத்தப்பட வேண்டும். 
 

இது மிகவும் முக்கியமான தீவிரமான பிரச்சினை. எனவே அலுவலர் தேர்வு ஆணையத்தை அழைத்து அனைத்துத் தேர்வுகளையும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் . ஏற்கனவே இருந்தது போல பெரு மண்டல அளவுகளில் இந்தத் தேர்வுகளை நடத்தவேண்டும் " என்று வலியுறுத்தினார் திருச்சி சிவா. 
 

உடனே தமிழக உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுந்து, "  இது முக்கியமான பிரச்சினை. உறுப்பினருடைய கருத்தை நான் ஆதரிக்கிறேன் " என்று குறுக்கீடுகளுக்கிடையே கூறினார்.
 

அதேபோன்று, அவரைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கே. கே.ராஜேஷ், சத்தீஸ்கரைச் சேர்ந்த  விஜய்சிங் சுதேவ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் கோ துங்கா, ஒடிசாவைச் சேர்ந்த அனுபவ மொகந்தி ஆகியோரும் திருச்சி சிவாவின் கருத்துக்கு தங்கள் ஆதரவை அவையில் பதிவு செய்தனர்.
 

 அதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு  " அலுவலர் நலத்துறை அமைச்சர் இதனை முக்கியப் பிரச்சினையாகக் கருத்தில் கொள்ள வேண்டுமென  ஒவ்வொரு உறுப் பினரும் விரும்புகின்றனர்.
 

எனவே அலுவலர் நலத்துறை அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தி செய்ய இயன்றதைச் செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

"மோடியின் ஆட்சி ஏழைகளுக்கு எதிரானது” - விருதுநகரில் திருச்சி சிவா பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 Trichy Siva campaign in Virudhunagar Modi's rule for the rich is against the poor

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகரில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக  கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை 108 முறை மோடி அதிகரித்துள்ளார். அப்படி கூட்டியதால், அப்போது 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  மன்மோகன் சிங்  ஆட்சியில் இருந்தபோது 500ரூபாயாக இருந்த கேஸ் விலை,  தற்போது 1000 ரூபாயாகிவிட்டது. இப்படி மக்களிடம் வசூலித்த பணம் 7.75 லட்சம் கோடி.  அந்தப் பணத்தை வைத்து சாமானியர்களுக்கு  கடன் கொடுக்காமல்,  பணக்காரத் தொழிலதிபர்களுக்கு 10ஆயிரம் கோடி,  12 ஆயிரம் கோடி எனக்  கடன் கொடுத்து,  அவர்கள் அனைவரும் கடனைத் திருப்பி அடைக்காமல் வெளிநாட்டில் ஜாலியாக வாழ்கிறார்கள்.

அவர்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல், ரூபாய் 10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது.  மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு. விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யவில்லை.  மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யவில்லை.  எல்.ஐ.சி.  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தார்கள். எப்போதும் ஏழைகளுக்கு எதிராகவே நடக்கும் ஆட்சிதான் மோடியின் ஆட்சி.  அதன் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். ஏழை,  பணக்காரர் என அனைவருக்கும் வாக்கு சமமாக இருக்கிறது. 

உங்களை யாரும் கட்டாயப்படுத்தியோ,  பணம் கொடுத்தோ வாக்கு செலுத்த வைக்க முடியாது.   நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தப்போகிறீர்கள் என்பது ரகசியமானது. சிறந்த பாதுகாப்போடுதான் வாக்கு செலுத்துவீர்கள்.  உங்களை ஆளுகின்ற அரசாங்கம் சரியாக இல்லை என்றால் உங்கள் வாக்கால் அதைத் தூக்கி எறியுங்கள்.” என்று பேசினார்.