![Paramilitary personnel arrive in Trichy for election security duties](http://image.nakkheeran.in/cdn/farfuture/UU6pFg-T6WcRNrVUdtRBpQo-6qKcJhmzGM88Wfa2Sto/1712225464/sites/default/files/inline-images/5_168.jpg)
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும், அவற்றை கண்காணிப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தேர்தல் அசம்பாவிதங்களின்றி அமைதியாக நடைபெறும் வகையில் மத்திய மாநில போலீஸார் தீவிர பாதுகாப்பு அளிப்பது வழக்கம். மாநில போலீஸார் ஆங்காங்கே அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக துணை ராணவப்படையினர் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தொடங்கி நேற்று (புதன்கிழமை) வரையில் சென்னையிலிருந்து, 8 குழுக்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் ரயில் மூலம் திருச்சி வந்தனர்.
ஒரு குழுவில் சுமார் 90 பேர் இடம்பெற்றுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்த துணை ராணுவப் படையினரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி தளவாய் ராஜசேகரன் தலைமையில், துணை தளவாய் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக செல்கின்றனர். 8 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ள நிலையில் மேலும் படிப்படியாக 11 குழுக்களைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.