![Panchayat secretary passed away Letter as Councilor Threat!](http://image.nakkheeran.in/cdn/farfuture/MGNPNb1fzozJXe5Lr_rZfZaZHfciqE5luWD8r5iuuRU/1652519943/sites/default/files/inline-images/th_2294.jpg)
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் அருகே உள்ளது ராமநாயனிகுப்பம் கிராமம். இந்த ஊராட்சியின் பஞ்சாயத்து செயலாளராக இருப்பவர் 36 வயதான ராஜசேகர். 13 ஆண்டுகளாக இந்த பஞ்சாயத்தின் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த மே 12ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனது தம்பி பிரவீன்குமாருக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாகச்சொல்லி ஒன்றியக்குழு கவுன்சிலர் ஆரி 2.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பதி தரவில்லை. அதேபோல் பஞ்சாயத்தில் வேலை செய்த பணம் 3.65 லட்சம் பெற்றுக்கொண்டார். இதற்கான பில்களை தரவில்லை. இதுக்குறித்து பி.டி.ஓவிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டு துணைத் தலைவரின் மகனை அந்த வேலையில் சேர்க்க முயற்சிக்கிறார். எனக்கு தொடர்ந்து போன் செய்து மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்.
என் சாவுக்கு அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் யாரும் காரணமில்லை. ஒன்றிய கவுன்சிலர் அரி மட்டுமே காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை கடிதத்தை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தபட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர் அவரது உறவினர்கள்.
அந்த கவுன்சிலர் ஆளும்கட்சியான திமுகவை சேர்ந்தவர். ராஜசேகரிடம், கவுன்சிலர் பணம் வாங்கியதை மறுக்கவில்லை. அதேநேரத்தில் தற்கொலைக்கு பின்னால் பஞ்சாயத்து ஊழல்கள், மோசடிகள் உள்ளன. இதுகுறித்து புகாராகி அது பற்றி துறை ரீதியிலான விசாரணை நடந்து வந்தது. கடிதத்தில் அவர் செய்த தப்புகளை மேம்போக்காக சொல்லியுள்ளார். தனக்குள்ள கடன்கள் குறித்து அவரது மனைவிக்கு கடிதம் எழுதியுள்ளதை பாருங்கள். இதையெல்லாம் வைத்து காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தினால் தற்கொலைக்கு உண்மையில் கவுன்சிலர் காரணமா அல்லது அவரது கடன் உட்பட வேறுசில பிரச்சனைகள் காரணமா என்பது தெரியவரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.